திண்மக்கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும்: தவிசாளர் சுபைர் ஜனாதிபதிக்கு கடிதம்


(அஷ்ரப் கான், ஏ.எல்.றியாஸ்)


உள்ளூராட்சி மன்றங்களில் நீண்டகாலமாக நாளாந்த சம்பளம் பெற்று திண்மக்கழிவகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.


அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...


கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் திண்மக்கழிவகற்றும் பணியில் ஈடுபடும் சுகாதார தொழிலாளர்கள் சுமார் 9 வருட காலமாக நாளாந்த சம்பளத்தினைப் பெற்றுக்கொண்டே தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 


குறித்த தொழிலில் ஈடுபட்டுவரும் சுகாதார தொழிலாளர்கள் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மாத்திரம் பணியாற்றி வருவதுடன் மாதாந்தம் 15000 ரூபா சம்பளத்தினையே பெற்று வருகின்றனர்.


நாட்டிலே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துக் காணப்படும், இக்காலகட்டத்தில் சிறியதொரு தொகையினை சம்பளமாகப் பெற்றுக்கொள்ளும் குறித்த ஊழியர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதனை அவதானிக்க முடிகிறது.


குறிப்பாக, வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் காணப்படும் இக்காலகட்டத்தில் மிகக்குறைந்த வருமானத்தினைக் கொண்டுள்ள குறித்த சுகாதார தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்களது தொழிலினை விட்டு விலகிச் செல்கின்றனர். எதிர்காலத்தில் ஏனையவர்களும் விலகிக்கொள்ளும் நிலைமைகளும் ஏற்பட்டுள்ளது.


இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் காலங்களில் திண்மக்கழிவுகளை அகற்றுவதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறானதொரு பெரும் சவாலினை தற்போது ஏறாவூர் நகர சபையும் எதிர்கொண்டுள்ளது. இதனால் சுற்றுப்புறச்சூழல் மற்றும் சுகாதார ரீதியாக பல்வேறு பிச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டியேற்பட்டும்.


எஎனவே குறைந்த வருமானத்தினைப் பெற்று நீண்டகாலமாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றி வரும் சுகாதார தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனத்தினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


அப்போதுதான் திண்மக்கழிவகற்றும் வேலைத்திட்டத்தினை எதிர்காலத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments