மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பொது அமைப்புக்கள் முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது: பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் றஹீம் தெரிவிப்பு

 (றியாஸ் ஆதம்)


அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பொது அமைப்புக்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கள் பாராட்டத்தக்கது என பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.ஐ.எம்.றஹீம் தெரிவித்தார்.


பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அவசரத் தேவை கருதி ஒருதொகுதி மருந்துப் பொருட்களை பொத்துவில் மத்திய கல்லூரி 1995ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பிரிவு மாணவர்கள் வழங்கியுள்ளனர்.


குறித்த பொருட்களை வைத்தியசாலைக்கு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (6) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அரச வைத்தியசாலைகளிலும் மருந்து தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான நிலையில் எமது பிரதேச பொது அமைப்புக்கள், பழைய மாணவர்கள் என பலரும் வைத்தியசாலைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.


நாட்டின் தற்போதைய நிலைமையினைக் கருத்திற்கொண்டு பொது அமைப்புக்கள், பழைய மாணவர்கள் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் பாராட்டத்தக்கது. அந்த வகையில் குறித்த மருந்துப்பொருட்களை வழங்கிய பொது அமைப்புக்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


இவ்வாறான ஒத்துழைப்புக்கள் கிடைக்கின்ற போது சிறந்த முறையில் சேவையினை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments